அம்பத்தூரில் தரைதளம் மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அனைவரும் பீதியில் வெளியேறினர்


அம்பத்தூரில் தரைதளம் மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அனைவரும் பீதியில் வெளியேறினர்
x
தினத்தந்தி 7 Aug 2017 5:30 AM IST (Updated: 7 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள வீடு மண்ணுக்குள் புதைந்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கணவன்–மனைவி மீட்கப்பட்டனர். அந்த குடியிருப்பில் வசித்து வந்த அனைவரும் பீதியில் வெளியேறினர்.

ஆவடி,

சென்னையை அடுத்த அம்பத்தூர் வெங்கடாபுரம், மவுனசாமி மடம் தெருவில் எஸ்.எஸ்.வி.கே.வனஜா என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 4 ஆண்டுகள் பழமையான 2 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 4 வீடுகள் உள்ளன.

தரை தளத்தில் உள்ள வீட்டில் ஓய்வுபெற்ற எல்.ஐ.சி. ஊழியர் சந்திரசேகர் (வயது 69), தனது மனைவி உமா (65), மகன் விஸ்வநாதன் (32), மருமகள் புவனா (30) மற்றும் பேரக்குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார்.

விஸ்வநாதன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேற்று முன்தினம் மாலை உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார். வீட்டில் சந்திரசேகரும், அவருடைய மனைவி உமாவும் மட்டும் இருந்தனர். இரவு 7 மணி அளவில் சந்திரசேகர் படுக்கை அறையில் கட்டிலில் படுத்து இருந்தார். உமா சமையல் அறையில் இருந்தார்.

அப்போது திடீரென சந்திரசேகர் படுத்து இருந்த அறை சுமார் 8 அடி ஆழத்துக்கு மண்ணுக்குள் புதைந்து பள்ளமானது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உமாவும் அந்த பள்ளத்தில் விழுந்துவிட்டார். பள்ளத்தில் விழுந்ததில் சந்திரசேகருக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியில் இருவரும் கூச்சலிட்டனர்.

அவர்களின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ளவர்கள் பள்ளத்தில் விழுந்து கணவன்–மனைவி இருவரும் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் ஏணியை கொண்டுவந்து பள்ளத்தில் இறங்கி 2 பேரையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர். தோள்பட்டையில் காயம் அடைந்த சந்திரசேகர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீசார் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த இடத்தை பார்வையிட்டனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் ஒரு கிணறு இருந்துள்ளது. அதில் மண்ணை கொட்டி மூடி அதன்மேல் அந்த கட்டிடத்தை கட்டியுள்ளனர். கிணற்றில் சரியாக மண்ணை கொட்டாததால் தரை தளத்தில் இருந்த அந்த அறை பூமிக்குள் இறங்கியது தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அனைவரும் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினர். கட்டிடம் இடிந்து விழுந்துவிடுமோ? என்ற பீதியில் மீண்டும் வீட்டுக்குள் செல்லாமல் அருகில் உள்ள தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story