நினைவூட்டும் ஸ்மார்ட்போன்


நினைவூட்டும் ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 7 Aug 2017 3:56 PM IST (Updated: 7 Aug 2017 3:56 PM IST)
t-max-icont-min-icon

சாதாரண தொலைத்தொடர்பு சாதனமாக விளங்கிய செல்போன்கள் இன்று, பல்வேறு பணிகளைச் செய்யும் ஸ்மார்ட்போன்களாக மாறிவிட்டன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஸ்மார்ட்போன்கள், மேலும் ஸ்மார்ட் வடிவங்களைப் பெற்று வருகின்றன.

பிரபல எலக்ட்ரானிக் பொருள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், ஸ்மார்ட்போன்களுக்கான புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளது. ‘பிக்ஸ்பை’ (BIXBY) எனப்படும் இந்த மென்பொருள் ஸ்மார்ட்போன்களை மேலும் புதுமையாக மாற்றுகிறது. குறிப்பாக சூழலுக்குத்தக்க முன்னறிவிப்புகளையும், நினைவூட்டல்களையும் செய்யக்கூடியது. இது நாம் மறந்துவிட்ட வேலைகளையும், அவசியமான பணிகளையும் சரியாக செய்து முடிக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

அதாவது நீங்கள் இருக்கும் பகுதி மேகமூட்டமாக இருந்தால் குடையை எடுத்துச் செல்லுங்கள் என்றும், காய வைத்திருக்கும் உடைகளை எடுத்து பத்திரப்படுத்தவும் என்றும் எச்சரிக்கும். சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டிய புகைப் படங்களை தனி போல்டரில் சேமித்தால் அதை உங்கள் நண்பர் களுக்கும், அனைத்து சமூக வலைத்தள கணக்குகளிலும் போஸ்ட் செய்துவிடும்.

மேலும் இதிலுள்ள வசதிகளை குரல் மூலம் கட்டளை கொடுத்து இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேமராவை திறந்து வாய்மொழியாக ‘செல்பி’ என்று கட்டளை கொடுத்தால் செல்பி எடுத்து கொடுத்துவிடும், ‘பிளாஸ்லைட் ஆன்’ என்றால் ‘லைட்’ ஒளிரும். யூடியூப் இணையதளம் செல்லவும் என்றால் உடனே இணையத்திற்குள் நுழைந்து விடும்.

கேலக்சி எஸ்8, எஸ்8+ போன்ற மாடல் போன்களில் இந்த வசதியை அப்டேட் செய்து கொள்ள முடியும். இனி தயாரிக்கப்படும் புதிய போன்களில் பிக்ஸ்பை வசதிக்காக தனி பொத்தான் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

Next Story