கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிசெல்ல வாய்ப்பு இருக்கிறது -மத்திய உள்துறை அமைச்சகம்


கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிசெல்ல வாய்ப்பு இருக்கிறது -மத்திய உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:00 PM IST (Updated: 7 Aug 2017 4:00 PM IST)
t-max-icont-min-icon

லுக்அவுட் நோட்டீஸ் விவகார வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிசெல்ல வாய்ப்பு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

சென்னை,

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக்அவுட் நோட்டீஸ்” அனுப்பப்பட்டது.

அந்த லுக் அவுட் நோட்டீசில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றால் அது பற்றி உடனே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. விசாரணை தீவிரமான நிலையில் கடந்த மே மாதம் தன் நண்பர்களுடன் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். ஜூன் 1-ந்தேதி அவர் நாடு திரும்பினார். மீண்டும் அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசியல் பழிவாங்கும் நோக்குடன், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றின் அதிகாரங்களை எனக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் என் தந்தை நிதி மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார். நான், 1996-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன்.

எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு நேரில் ஆஜராகும்படி, சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்ததால், ஆஜராக முடியிவில்லை. எனது வக்கீல் மூலம் வழக்கு தொடர்பான விளக்கத்தை அளித்தேன்.

அதேநேரம், சி.பி.ஐ. அனுப்பிய சம்மனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு கடந்த ஜூலை 21-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, என்னை தேடப்படும் நபராக ஜூலை 18-ந் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து எந்த தகவலையும் ஐகோர்ட்டுக்கு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில், இங்கிலாந்து நாட்டிற்கு வருகிற 16-ந் தேதி போக திட்டமிட்டுள்ளேன். ஆனால், என்னுடைய வெளிநாட்டு பயணத்தை தடுக்கும் விதமாக, மத்திய அரசு என்னை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்தும், அரசியல் பழிவாங்கும் செயலாகும்.

எனவே, என்னை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்தது, சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், இந்த மனுவுக்கு மத்திய அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, விசாரணையை 7-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது   மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில், 

மல்லையா போன்று கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்புவதைத் தடுக்க நோட்டீஸ்  அனுப்பப்பட்டு உள்ளது.கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது.மல்லையா போன்று கார்த்தி சிதம்பரம் தப்புவதை தடுக்க நோட்டீசு அனுப்பப்பட்டது. என கூறி உள்ளது

Next Story