பயிர்காப்பீடு தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
கடந்த ஆண்டு வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்காமல் உள்ளதால் உடனடியாக வழங்கக்கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயிர்காப்பீடு தொகை வழங்கக்கோரி திரளாக தலையில் துண்டு போட்டபடி வந்து முற்றுகையிட்டனர். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜமாத் தலைவரும், ஊராட்சி கழக செயலாளருமான முகம்மது ரபீக் தலைமையில் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நடராஜனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– நாங்கள் மேலச்சிறுபோது மற்றும் சேர்ந்தனேரி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகிறோம்.
எங்களின் விவசாய நிலங்களுக்கு கடந்த 2016–17–ம் ஆண்டிற்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல்பயிருக்கு மேலச்சிறுபோது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் காப்பீடு செய்திருந்தோம். கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டு நெல்விவசாயம் அடியோடு இல்லாமல் போனது. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில் அரசின் பயிர்காப்பீடு தொகையை வாங்கி விவசாய கடனை அடைக்கலாம் என்று காத்திருந்தோம். இந்நிலையில் மாவட்டத்தில் மற்ற பகுதிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் எங்கள் பகுதி மட்டும் விடுபட்டு போய் உள்ளதை அறிந்து கடும் வேதனையில் உள்ளோம்.
காப்பீடு தொகையை வாங்கி கடந்த ஆண்டிற்கான விவசாய கடனை அடைத்துவிட்டு புதிதாக கடன் வாங்கி விவசாயம் செய்ய முடிவு செய்திருந்த வேளையில் எங்களை புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, உடனடியாக நேரில் ஆய்வு செய்து உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ள மேலச்சிறுபோது, சேர்ந்தனேரி பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனு கொடுத்தனர்.
இதேபோன்று, கொழுந்துரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கிராம தலைவர் நசீர் அகமது தலைமையிலும், கமுதி தாலுகா கே.வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகளும் தங்கள் பகுதிகளுக்கு இதுவரை பயிர்காப்பீடு வழங்கவில்லை என்றும், காப்பீடு வழங்கும் பட்டியலில் தங்கள் பகுதி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர். எனவே, உடனடியாக பயிர்காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன், அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.