திருநின்றவூரில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வாலிபர் கைது
திருநின்றவூரில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
திருநின்றவூரை அடுத்த நடுக்குத்தகை அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற சீனிவாசன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி ஹேமலதா (26) என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 5–ந் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சீனிவாசன் மறுநாள் காலை அருந்ததிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் பாலசுப்ரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று மாலை திருநின்றவூர் 54 ஏ பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நடுக்குத்தகை ராணுவத் தெருவை சேர்ந்த பெயிண்டரான புலி என்ற நாகராஜ் (25) என்பவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், சம்பவத்தன்று தனது நண்பருடன் மது அருந்திக்கொண்டிருந்த சீனிவாசனுக்கும், அப்போது அங்கு வந்த நாகராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சீனிவாசனின் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது நாகராஜ், சீனிவாசனை பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
சிமெண்ட் தரையில் விழுந்ததால் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நாகராஜ் அங்கிருந்து தப்பிச்சென்றார். நேற்று மாலை பூந்தமல்லிக்கு தப்பிச்செல்ல பஸ் நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருநின்றவூர் போலீசார் நாகராஜை கைது செய்து நேற்று இரவு திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.