கைதிகளின் ஊதியத்தில் 75 சதவீதத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வழக்கு உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
சிறைக் கைதிகளின் ஊதியத்தில் 75 சதவீதத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 சிறப்பு சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளைச் சிறைகள், 3 திறந்த வெளி சிறைகள், 2 ஆண் மற்றும் 3 பெண் சிறப்பு சார்பு சிறைகள், 12 வளரிளம் பருவ சிறைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றவாளிகள் உள்ளனர்.
சிறைக்கைதிகளை 3 வகையாக பிரித்து அதிக திறன் மிக்கவர்களுக்கு 100 ரூபாயும், திறன்மிக்கவர்களுக்கு 80 ரூபாயும், திறன் குறைந்தவர்களுக்கு 60 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் அதிக திறன் மிக்கவர்களுக்கு 180 ரூபாயும், திறன் மிக்கவர்களுக்கு 160 ரூபாயும், திறன் குறைந்தவர்களுக்கு 150 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும் சிறை விதிப்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறைவாசிகளின் ஊதியம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை குழு அமைக்கப்படவில்லை.
தமிழக சிறை விதி 481–வது பிரிவின்படி, சிறைக் கைதிகளின் ஊதியத்தில் 50 சதவீதத்தை அவர்களின் உணவு மற்றும் உடைக்காகவும், 20 சதவீதத்தை சிறைக்கைதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகைக்காகவும் பிடித்தம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீத தொகை சிறைக்கைதிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இது குறைந்தபட்ச ஊதிய சட்டத்திற்கு எதிரானது. கேரளாவில் சிறைக்கைதிகளின் ஊதியம் எவ்வித பிடித்தமுமின்றி முழுமையாக வழங்கப்படுகிறது. எனவே தமிழக சிறைவிதி 481–ஐ சட்டவிரோதமானது என அறிவித்து, சிறைக்கைதிகளின் ஊதியத்தில் 75 சதவீதத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இதுகுறித்து தமிழக அரசு உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 28–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.