ஆரப்பாளையம் முதல் விரகனூர் வரை வைகை ஆற்றை தூய்மைப்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை ஆரப்பாளையம் முதல் விரகனூர் வரை வைகை ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
வருசநாட்டு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியாக சுமார் 258 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது. இந்த ஆறு பயன்படுத்த இயலாத அளவுக்கு 452–க்கும் அதிகமான பகுதிகளில் கழிவு நீர் கலக்கிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் மட்டும் 36 இடங்களில் கழிவுநீரும், 100 டன் அளவிலான கழிவுகளும் ஆற்றில் விடப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் ஆற்றுப்பகுதியை ஆக்கிரமித்து பல்வேறு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோர பகுதியில் வசிப்பவர்கள் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அந்த ஆற்றை தூய்மைப்படுத்தி பாதுகாக்கவும். மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. இதுதொர்பாக கடந்த 2013–ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல வழக்கில் வைகை ஆறு மற்றும் கிருதுருமால் நதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் வைகை ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதுடன் அதிகளவில் குப்பைகளும், கழிவு நீரும் கலக்கின்றன. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். வைகை ஆறு மாசடைவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும். வைகை ஆற்றை மாசுபடுத்துபவர்கள் மீதும், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஆற்றை தூய்மைப்படுத்த உத்தரவிட வேண்டும். குப்பைக் கழிவுகளை கொட்டுவோருக்கு கடும் தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வைகை ஆற்றை தூய்மைப்படுத்த சிறப்பு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும். அந்த குழு முதற்கட்டமாக மதுரை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட ஆரப்பாளையம் பகுதி முதல் விரகனூர் வரை வைகை அணையை தூய்மைப்படுத்த வேண்டும். மேலும், வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டுவோர் மீதும், கழிவுகளை கலப்போர் மீது நடவடிக்கை எடுத்து அதுதொடர்பான அறிக்கையை மதுரை கலெக்டர், மாநகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்குவிசாரணையை வருகிற (செப்டம்பர்) 1–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.