ஈரோட்டில் கியாஸ் சிலிண்டருடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் கியாஸ் சிலிண்டருடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு,
குஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், கியாஸ் சிலிண்டரின் மானியத்தை ரத்து செய்யக்கூடாது, ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையில்லாமல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஈரோடு காந்திஜிரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணியின் மாநகர் மாவட்ட தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் தீபா, கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சித்ராவிஸ்வநாதன், கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் கட்சியினர் கியாஸ் சிலிண்டரை வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ்ராஜப்பா, சிறுபான்மைபிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் கே.என்.பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பூந்துறைரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக், மாநகர துணைத்தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் ஜிகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி துணைத்தலைவர் மாரியப்பன், நிர்வாகிகள் முத்துகுமார், கோபாலகிருஷ்ணன், பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.