பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் கலெக்டரிடம் மனு
வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
ஈரோடு,
தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்–2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.அறிவழகன், செயலாளர் ஜி.செந்தில்குமார், பொருளாளர் பி.பெரியசாமி உள்பட 30–க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
நாங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை பணித்தொகுதி தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று கடந்த 2012–ம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறோம். மற்ற உதவியாளர்களுக்கு உள்ளது போல் நேரடி நியமன உதவியாளர்களுக்கும் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு 4 ஆண்டுகள் பணி செய்தால் போதும் என அறிவிக்கவேண்டும். டி.என்.பி.எஸ்.சி. நேர்காணல் செய்யப்பட்டு நேரடி நியமன உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவதால் நேர்காணல் பதவியில் இதர துறையினருக்கு வழங்குவது போல் ரூ.9 ஆயிரத்து 300 ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்பட எங்களுடைய 5 அம்ச கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16–ந் தேதி வருவாய்துறைக்கு மனு அனுப்ப உள்ளோம். உரிய தீர்வு கிடைக்காத நிலையில் மாநிலம் முழுவதும் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வருகிற 22–ந்தேதி கவன ஈர்ப்பாக ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கஉள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.