சாலையோரம் நின்ற டிராக்டர் மீது பால் வேன் மோதல்: விற்பனை மேலாளர் பலி


சாலையோரம் நின்ற டிராக்டர் மீது பால் வேன் மோதல்: விற்பனை மேலாளர் பலி
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் நின்ற டிராக்டர் டிரைலரின் பின்பகுதியில் பால் வேன் மோதிய விபத்தில், விற்பனை மேலாளர் பலியானார். டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் புதிய காலனியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(வயது 40). இவர், காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் பால் நிறுவனத்தில் இருந்து வேனில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் வழியாக திருத்தணி நோக்கி விற்பனைக்கு கொண்டு சென்றனர். வேனை காஞ்சீபுரம் அடுத்த கலியனூர் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த யுவராஜ்(27) என்பவர் ஓட்டினார்.

அவருடன் விற்பனை மேலாளர் ஜெய்சங்கர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியதா(39) ஆகியோர் பால் வேனில் சென்றனர்.

திருவள்ளூர்–திருப்பதி நெடுஞ்சாலையான சி.வி.நாயுடு சாலையில் பால் வேன் சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த பால் வேன், சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் டிரைலரின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த விற்பனை மேலாளர் ஜெய்சங்கர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். டிரைவர் யுவராஜ், தொழிலாளி ஆரோக்கியதா இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கூர்மவிலாசபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனிரத்தினம்(55). கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பேரன், பேத்திகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூரில் தனது பேரன், பேத்திகளை இறக்கி விட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக முனிரத்தினம் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முனிரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story