குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்தணி,

திருத்தணியை அடுத்த கோரமங்கலம் காலனியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் குடிநீர் கிடைக்காமல் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், நேற்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திருத்தணி–சோளிங்கர் நெடுஞ்சாலையில் கோரமங்கலம் காலனி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் திருத்தணி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ராஜராஜன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

விரைவில் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ரெட்டிதெரு பகுதியில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 4 நாட்களாக குழாய்களில் தண்ணீர் வினியோகம் நடைபெறவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள், தொலை தூரத்தில் உள்ள வயல்களுக்கு சென்று அங்குள்ள கிணறுகளில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து சுமந்து வருகின்றனர். இதையடுத்து தங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க கோரி, ரெட்டி தெரு பகுதி பொதுமக்கள் நேற்று காலை ஊத்துக்கோட்டை–பெரியபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குழாய்களில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் அளித்த உறுதி மொழியை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.


Next Story