விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே தர்மாபுரி கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் மூலம் தினமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் வறட்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் போதுமான குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9.30 மணியளவில் காலிகுடங்களுடன் அதனூர் பஸ் நிறுத்தம் அருகில் திரண்டனர். தொடர்ந்து, அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கோஷம் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்– திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கெடார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலுமணி, பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.
இதையடுத்து காணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேறொரு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் காலை 10 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.