அரசு குவாரிகளில் இருந்து எடுத்து வரும் மணலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை


அரசு குவாரிகளில் இருந்து எடுத்து வரும் மணலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2017 10:45 PM GMT (Updated: 7 Aug 2017 8:33 PM GMT)

குவாரிகளில் இருந்து எடுத்து வரப்படும் மணலை யாரேனும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜேஷ் கூறினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகளில் மண் அள்ள செல்லும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்பு முகாம் கடலூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதை கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–அமைச்சரின் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு மணல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைத்திட பொதுப்பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இணையதளம் மற்றும் செல்போன் செயலி ஆகியவற்றின் வாயிலாக தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல் எளிதாக கிடைத்திட ஏதுவாக தமிழ்நாடு மணல் இணை சேவை என்ற இணையதளத்தையும் செல்போன் செயலியையும் முதல்–அமைச்சர் கடந்த 28–6–2017 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் நேரடியாக சென்று மணலை பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக அரசின் மணல் இணைய சேவையில் மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளை தவிர்க்கும் வகையில் மணல் அள்ள செல்லும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்தலுக்கான சிறப்பு முகாம் இன்று(அதாவது நேற்று) முதல் வருகிற 11–ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை வட்டார போக்குவரத்து அலுவலரால் கடலூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

வாகனங்களின் உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தின் பதிவு புத்தக விவரம், வாகன அனுமதி சான்று, தகுதி சான்று, சாலைவரி ரசீது மற்றும் காப்பீட்ட விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பின்னர் தரவிறக்கம் செய்யப்படும் படிவத்துடன் முகாமுக்கு வர வேண்டும்.

பதிவேற்றிய மேற்காணும் ஆவணங்களுக்கான அசல் சான்றுகளை அவற்றுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வாகங்களை கொண்டு வர தேவையில்லை. வாகன தரவுகளை ஒழுங்குபடுத்தவே இந்த முகாம் நடக்கிறது. ஆவணங்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளும் வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே மணல் லாரி உரிமையாளர்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடலூர் மாவட்டத்தில் சி.அரசூர், கூடலையாத்தூர், மதகளிர்மாணிக்கம், ஆழங்காத்தான் ஆகிய 4 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் 5 இடங்களில் மணல் குவாரிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தற்போது ஆயிரம் மணல் வாகனங்கள் உள்ளன.

குவாரிகளில் இருந்து மணல் அள்ளிச்செல்லும் போது மணலின் மேற்பரப்பில் தண்ணீரை தெளித்து தார்பாயால் மூடி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டு செல்ல வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் வி‌ஷமிகள் யாரேனும் மணலை அள்ளி செல்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் பொதுப்பணித்துறையின் வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், சிதம்பரம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராமமூர்த்தி, சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு உதவி செயற்பொறியாளர் அசோகன், வட்டார போக்குவரத்து அலுவலர் மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story