மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்


மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-08T02:37:43+05:30)

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகத்தை டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளான பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி., பி.எஸ்சி. ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஓ.டி., பி.ஆப்தோமாலஜி உள்ளிட்ட 9 வகையான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. இதேபோல் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியிலும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் நேற்று காலை விண்ணப்பம் வினியோகத்தை தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று ஏராளமான மாணவ– மாணவிகளும், அவர்களது பெற்றோரும் வந்து விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர். இதனால் நீண்டவரிசை காணப்பட்டது. விண்ணப்ப கட்டணத்துக்குரிய டிமாண்ட் டிராப்ட் எடுப்பதற்காக மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வங்கி கிளையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

விண்ணப்பங்கள் வினியோக தொடக்க நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் லியோடேவிட், உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) ஆறுமுகவேலன், கல்வி அதிகாரி ரோசிட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

500 விண்ணப்பங்கள்

இதுதொடர்பாக டீன் (பொறுப்பு)ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

மருத்துவம் சார்ந்த 9 வகையான இளங்கலை பட்ட  படிப்புகளுக்கு 1,400 விண்ணப்பங்கள் வந்துள்ளன. எஸ்.சி., எஸ்.டி. மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுச்செல்லலாம். இதற்கு அவர்கள் தங்களது சாதிச்சான்று நகலை கொண்டுவந்து காண்பிக்க வேண்டும். பிற மாணவ– மாணவிகள் ரூ..400–க்கான டி.டி. கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். வருகிற 23–ந் தேதி வரை வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிநாள் 24–ந் தேதியாகும்.

முதல்நாளான நேற்று 500–க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story