மகளை கொடுமைப்படுத்திய கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதியவர் மனு


மகளை கொடுமைப்படுத்திய கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதியவர் மனு
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

மகளை கொடுமைப்படுத்திய கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலவலகத்தில் முதியவர் மனு

நாகர்கோவில்,

மார்த்தாண்டம் சிங்களேயர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது மகளை நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைத்தோம். திருமணத்தின்போது 80 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம், ரூ.1½ லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை மகளின் கணவர் வீட்டார் வற்புறுத்தி பெற்றுக் கொண்டனர். திருமணமானதில் இருந்தே எனது மகளை வரதட்சணை குறைவாக கொண்டு வந்தாய் என்று கூறியும், விவாகரத்து கொடு என்று கேட்டும் அவளுடைய கணவரும், அவரது தாயாரும் கொடுமைப்படுத்தி வந்தனர். பலமுறை எனது மகள் அவளுடைய கணவரால் தாக்கப்பட்டு இருக்கிறாள். நாங்கள் சமாதானப்படுத்துவோம்.

இந்தநிலையில் கடந்த 4–ந் தேதி நள்ளிரவு 11.42 மணிக்கு எனது செல்போனில் எனது மகளின் மாமியார் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எனது மகளும், அவளுடைய கணவரும் மோட்டார் சைக்கிளில் போகும்போது விபத்து ஏற்பட்டதாகவும், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் கூறினார். நான் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றுபார்த்தபோது எனது மகள் தலையில் அடிபட்டு, பேசமுடியாத நிலையில் இருந்தாள். இதுகுறித்து அவளுடைய கணவரிடம் கேட்டபோது என்னை தாக்கினார். தற்போது எனது மகள் கோமா நிலையில் இருக்கிறாள். இது விபத்தாக தெரியவில்லை என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். எனவே அவள் தாக்கப் பட்டிருக்கலாமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து புகார செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து நன்கு விசாரித்து, கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story