சேலம் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வருகிற 19–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதாவது சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் காலியாக உள்ள 550 அங்கன்வாடிப் பணியாளர்கள், 153 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 782 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு இனச் சுழற்சி முறையில் நேர்முகத் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்ய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க 1.7.2017 நாளன்று 25 வயது முடிந்து 35 வயதுக்கு மிகாதவர்கள், விதவைகள, கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மலைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகப்பட்ச வயது 45 எனவும், மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது 20 எனவும், குறைந்தபட்ச கல்வித் தகுதி 8–ம் வகுப்பு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர இனங்களுக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அங்கன்வாடி உதவியாளர்கள் 1.7.2017 நாளன்று 20 வயது முடிவுற்று 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு 45 வயது என அதிகப்பட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதே கிராமத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே கிராமத்தில் இல்லாவிடில் அதே கிராம பஞ்சாயத்தை சேர்ந்த அருகில் உள்ள கிராமத்தை சார்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவார். நகர்ப்புறங்களில் அங்கன்வாடி பணியாளர் அதே வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்தாரரின் வசிப்பிட ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஏதேனும் ஒரு சான்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இத்துடன் சான்றொப்பம் இடப்பட்ட கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், தாசில்தாரால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்று மற்றும் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்று இணைத்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதற்குரிய விண்ணப்பங்களை மாவட்ட இணையதளத்தில் www.salem.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகிற 19–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை அரசு வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய சான்றுகளுடன் 19–ந் தேதி மாலை 5.45 வரை சம்பந்தப்பட்ட வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.