தலைவாசல் அருகே பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி 2 விவசாயிகள் பரிதாப சாவு


தலைவாசல் அருகே பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி 2 விவசாயிகள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

தலைவாசல்,

சேலத்தில் இருந்து நேற்று பிற்பகல் கள்ளக்குறிச்சி நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதில் 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை தலைவாசல் அருகே நத்தகரையை சேர்ந்த டிரைவர் ரவி ஓட்டிச்சென்றார். ஆத்தூரை சேர்ந்த முகமதுபாஷா கண்டக்டராக இருந்தார்.

இந்த பஸ் பிற்பகல் 3 மணியளவில் தலைவாசல் அருகே நத்தகரை பகுதியில் ஒரு தனியார் சேகோ ஆலை அருகே வந்தபோது, சாப்பிடுவதற்காக பஸ்சை நிறுத்த, டிரைவர் ரவி மெதுவாக ஓட்டியுள்ளார். அப்போது அரியானாவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா பூசப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி வாசுதேவன் (வயது 64) என்பவரும், அதே ஊரை சேர்ந்த மற்றொரு விவசாயியும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும், பஸ்சில் வந்த 3 பயணிகளும், கன்டெய்னர் லாரியின் டிரைவரும் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி தகவலறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் வாசுதேவனும், மற்றொருவரும் தலைவாசல் பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவரது வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது. வாசுதேவனுடன் வந்த மற்றொருவர் யார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்தில் இறந்த வாசுதேவனுக்கு ராணி (64) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். முன்னதாக இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.



Next Story