சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து பெண் திடீர் தர்ணா போராட்டம்
சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியை சேர்ந்தவர் காதர்பாட்ஷா, கார் டிரைவர். இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய மனைவி பஜ்ரியா(வயது 40). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பஜ்ரியா நேற்று தனது 3 மகள்களுடன் சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது கணவர் மீது புகார் கூறினார். அப்போது அங்கிருந்த போலீசார் இதுதொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து அங்கு சென்ற அவரிடம் போலீசார் புகார் வாங்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பஜ்ரியா உடனே டவுன் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற பெண் போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பஜ்ரியாவை போலீஸ் உதவி கமிஷனரிடம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் உதவி கமிஷனர் அன்பு விசாரணை நடத்தினார்.
பின்னர் இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு பஜ்ரியா வீட்டை விற்று அதில் கிடைத்த ரூ.5 லட்சத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை தற்போது அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு காதர்பாட்ஷா இந்த பணத்தை சேலத்தில் உள்ள உறவினர்களிடம் கொடுத்துள்ளதாகவும், இதனால் என்னிடம் பணம் இல்லை என்றும் கூறி உள்ளார். இதனால் கணவரிடம் இருந்து பணத்தை பெற்று தருமாறு கூறி அவர் சேலம் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.