சேலத்தில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது சொகுசு கார் பறிமுதல்


சேலத்தில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது சொகுசு கார் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Aug 2017 5:15 AM IST (Updated: 8 Aug 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலை சுமார் 4 மணியளவில் அரசு முத்திரையுடன் தமிழ்நாடு அரசு என முன்னும், பின்னும் கண்ணாடியில் பெயர் எழுதிய சொகுசு கார் ஒன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது.

அந்த காரில் இருந்து டிப்–டாப் ஆசாமி ஒருவர் இறங்கினார். அவருடன் உதவியாளர் என கூறிக்கொண்டு ஒருவரும் வந்தார். இருவரும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபுவின் அறைக்கு சென்றனர். அவர்களில் டிப்–டாப்பாக வந்தவர், நான் இணை செயலாளர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனவும், கலெக்டருக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டும் எனவும் விஜய்பாபுவிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த நபர் வைத்திருந்த சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் அந்த ஆசாமி பதற்றத்துடன் காணப்பட்டார். சான்றிதழ் தொடர்பாக சென்னையில் உள்ள அரசு அதிகாரியிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு கேட்டபோது, அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது. இதனால் அந்த நபர் தப்பித்து ஓடி விடக்கூடாது என்பதற்காக, போலீசார் வரும்வரை அங்கே அவர்கள் இருப்பதற்காக காபி கொடுக்கப்பட்டு, உட்கார வைக்கப்பட்டனர்.

இதனிடையே, போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் பிடித்ததுடன், சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்த முருகன் மகன் ஸ்ரீதர் (வயது 26) என்பதும், பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்ததும், கடந்த 6 மாதங்களாக கிச்சிப்பாளையம் பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பொதுத்துறை தலைவர் மற்றும் இணைச் செயலாளர் அலுவலகம் என்று பெயர் பலகை வைத்து அலுவலகம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும் தான் பெரிய அதிகாரி என்று காண்பித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி ஏமாற்றி வந்ததும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு சொகுசு காரை கடனுக்கு வாங்கி, அதில் தமிழக அரசின் முத்திரையை பதித்து ஊரை சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஸ்ரீதரின் உதவியாளர் என கூறிய இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த ஞானசுந்தரம் (60) என்பவரிடம் போலீசார் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஸ்ரீதர் அலுவலகம் நடத்திவந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த பெயர் பலகையையும் போலீசார் அகற்றினர். அங்கிருந்த கணினி மற்றும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர், விஜய்பாபுவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தான் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றியதாகவும், தற்போது தமிழ்நாட்டுக்கு இடமாறுதல் பெற்றுள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் பணிபுரிய உள்ளதால் கலெக்டர் அலுவலகத்தில் அறை ஒதுக்கி தரும்படியும் கேட்டுள்ளார். அதற்கு விஜய்பாபு, அவரிடம் இது தொடர்பாக அரசின் உத்தரவு கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீதர் தன்னுடைய அலுவலக உதவியாளர் வருவார் எனவும், அவரிடம் எந்த அறை ஒதுக்கப்படும் என்பதையும் தெரிவியுங்கள் என்றும் கூறியுள்ளார். அதற்கு நீங்கள் நேரடியாக வருமாறு கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு அவரிடம் தெரிவித்தார். இதற்கிடையில் ஸ்ரீதரின் உதவியாளர் என கூறி ஞானசுந்தரம் வந்து அறையை விரைவில் ஒதுக்கி கொடுக்குமாறு கடந்த 2 நாட்களாக கேட்டு வந்துள்ளதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்தே கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி வசமாக சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story