காதலியுடன் நெருக்கமாக இருப்பதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது


காதலியுடன் நெருக்கமாக இருப்பதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2017 3:23 AM IST (Updated: 8 Aug 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

காதலி தன்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

துமகூருவில், காதலிக்கு இன்னொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆனதால் திருமணத்தை நிறுத்த திட்டமிட்டு, காதலி தன்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துமகூரு மாவட்டம் சிரா பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ்(வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்தார்கள். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே சஞ்சீவுடனான காதலை கைவிடும்படி தங்களது மகளிடம் பெற்றோர் கூறினார்கள். மேலும் தங்களது மகளுக்கு சஞ்சீவை திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் மறுத்து விட்டார்கள். அதே நேரத்தில் தங்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தார்கள்.

அதன்படி, அந்த பெண்ணுக்கும், வேறு ஒரு நபருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணுக்கு இன்னொரு நபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், சஞ்சீவ் வேதனையும் ஆத்திரமும் அடைந்ததாக தெரிகிறது. மேலும் காதலிக்கு இன்னொருவருடன் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்த சஞ்சீவ் திட்டமிட்டார்.

இதற்காக தான் காதலிக்கும் போது அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் சஞ்சீவ் வெளியிட்டார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அதுபோல, அந்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நபருக்கும் தெரியவந்தது. இதனால் அவர், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. உடனே நடந்த சம்பவங்களை கூறி சிரா போலீஸ் நிலையத்தில் சஞ்சீவ் மீது பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தார்கள்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவை கைது செய்தார்கள். மேலும் சஞ்சீவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, அவரது நண்பரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story