ஆந்தையை வைத்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
பெங்களூருவில், ஆந்தையை வைத்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு காட்டன்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மர்மநபர்கள் ஆந்தை ஒன்றை பிடித்து வைத்துள்ளதாக சி.ஐ.டி. வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள், அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, ஆந்தையை பிடித்து வைத்திருந்த 5 பேரிடம் சி.ஐ.டி. வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான மன்மோகன், அவருடைய கூட்டாளிகளான முதீர், பஷீர், சலீம், ஜூபீர் என்பதும், அவர்கள் மைசூரு மாவட்டம் உன்சூர் வனப்பகுதியில் ஆந்தையை பிடித்ததும் தெரியவந்தது. மேலும், அந்த ஆந்தையை வைத்து அவர்கள் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் 5 பேரையும் அதிகாரிகள் கைது செய்து, ஆந்தையை பறிமுதல் செய்தனர்.
மேலும், ஆந்தையை வைத்து அவர்கள் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டது குறித்து சி.ஐ.டி. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–கைதானவர்கள் காட்டன்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு அவர்கள் வைத்திருந்த ஆந்தையை கொண்டு சென்று அலற விடுவார்கள். பின்னர், அவர்களில் ஒருவர் அந்த வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு ஆந்தை அலறுவது குடும்பத்துக்கு சரியானது அல்ல. எனவே, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வாருங்கள் என கூறுவார்கள்.
இதை நம்பும் பொதுமக்கள் தங்களின் வீடுகளை பூட்டிவிட்டு கோவிலுக்கு செல்வார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் வீடுகளில் நுழைந்து திருட்டை அரங்கேற்றி உள்ளனர். மேலும், சிலர் தங்களின் வீடுகளையும் காலி செய்ய முடிவு செய்துள்ளனர். இவ்வாறு முடிவு செய்பவர்களிடம் குறைந்த விலையில் அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை வாங்க அவர்கள் முயற்சித்துள்ளனர். கைதான 5 பேரும் காட்டன்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.