குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் சொந்த ஊர் திரும்பினர்
பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் நேற்று அதிகாலை சொந்த ஊர் திரும்பினர்.
பெங்களூரு,
குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிடுகிறார்கள். 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.குஜராத் சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் பார்த்தால், பா.ஜனதா சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஒருவரும் வெற்றி பெற முடியும். ஆனால் பா.ஜனதா 3–வது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் காங்கிரசை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பா.ஜனதாவுக்கு தாவினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம், மீதமுள்ள 44 எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டி கடந்த 28–ந் தேதி நள்ளிரவு பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ‘ஈகிள்டன்‘ என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். 10 நாட்களுக்கும் மேலாக அவர்கள் அங்கு இருந்தனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் வழங்கப்பட்டு இருந்தது. அவரும் அங்கேயே தங்கி இருந்தார்.இந்த நிலையில் குஜராத்தில் இன்று மேல்–சபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் நேற்று அதிகாலை 3 மணியளவில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். அதாவது, சொகுசு விடுதியில் இருந்து 2 பஸ்கள் மூலம் அவர்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் குஜராத் சென்றனர்.
இதையொட்டி சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்தப் பகுதி பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது.