டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி சேலம் பெண் போலீஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
தலைவாசல் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான். சேலம் பெண் போலீஸ் டெங்கு அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி 3–வது வார்டு சிவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், விவசாயி. இவரது முதல் மனைவி தனம். இந்த தம்பதிக்கு பிரகதீஷ்வரன் (வயது 14) என்ற மகன் இருந்தான். இவன் தலைவாசலில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனம் இறந்து விட்டார். அதன் பின்னர் கார்த்திக், வேறு பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 4 நாட்களாக பிரகதீஷ்வரனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டதாக டாக்டர்கள் கூறவே, நேற்று முன்தினம் பிரகதீஷ்வரன் வீடு திரும்பினான்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதுடன் பிரகதீஷ்வரன் வாந்தியும் எடுத்தான். அதைத்தொடர்ந்து ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவன் அனுமதிக்கப்பட்டான். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரகதீஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சையை டாக்டர்கள் கொடுக்கவில்லை என்பதால் பிரகதீஷ்வரன் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் தலைவாசல் பகுதியில் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. சுகாதாரத்துறையினர் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் சித்தனூர் அருகே உள்ள தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுதா (31). இவர் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 நாட்களாக கடும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. காய்ச்சல் அதிகரிக்கவே நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், டெங்கு அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சுதா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் இருந்தது. அதைத்தொடர்ந்து அங்கு ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அவர்களில் சுதாவும் ஒருவர். பாதுகாப்பு பணியில் இருந்தபோது காய்ச்சல் காரணமாக விடுப்பு கேட்டும், அதிகாரிகள் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. காய்ச்சல் அதிகரித்த நிலையில் சுதா, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது போலீசார் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.