மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படும்
மணல் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படும் என்றும், பொதுமக்களுக்கு ஒரு லோடு மணல் ரூ.35 ஆயிரத்துக்கு கிடைக்கும் என்றும் மந்திரி ஜெயச்சந்திரா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படும். பொதுமக்களுக்கு ஒரு லோடு மணல் ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்களை கட்டும் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்குவது போலவே மணலும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வீடு கட்டுபவர்கள் அதற்கான வரைபடம், செலவு மதிப்பீடு, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி சான்றிதழ் ஆகியவற்றை தாக்கல் செய்து மணல் பெறலாம்.தற்போது ஒரு லோடு மணல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதை தடுக்கவே அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக கர்நாடகத்தில் வறட்சி ஏற்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு வறட்சியின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இதனால் 1.91 லட்சம் எக்டேர் பரப்பளவில் தென்னை மரங்கள் விளைச்சலும், 51 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பாக்கு விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருகிற 15–ந் தேதிக்குள் விவரங்கள் பெறப்படும்.
அதன் பிறகு நிதி உதவி வழங்குமாறு கோரி மத்திய அரசுக்கு மனு அளிக்கப்படும். மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதற்கு நிதி உதவி வழங்க வேண்டும். இந்த ஆண்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதனால் மாநிலங்களுக்கு கிடைக்கும் நிவாரண நிதி பெரிய அளவில் குறையும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.மத்திய உள்துறை மந்திரியை நேரில் சந்தித்து மனு கொடுப்போம். தேவைப்பட்டால் பிரதமரையும் சந்திப்போம். காவிரி படுகையில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. இதனால் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. இந்த ஆண்டும் வறட்சி ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க காவிரி படுகையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கூட்டப்படும். அதற்கு முன்பாக மண்டியா மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை(புதன்கிழமை) கூட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.