பாலக்கோடு பகுதியில் பரவும் டெங்கு காய்ச்சல் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அவதி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, அ.மல்லாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஏராளமானோர் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அங்கு போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் படுக்கை வசதிகள் இல்லாதால் தரையில் படுத்து உறங்கி சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:– பாலக்கோடு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் குளிர்ந்த தரையில் படுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மேலும் உடல்நிலை மோசமாகிவிடும். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு அமைக்க வேண்டும். காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசுமருந்து, சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.