தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனா கண்டனம்
தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் மீது நில முறைகேடு குற்றச்சாட்டு சுமத்திய தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை,
தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் மீது நில முறைகேடு குற்றச்சாட்டு சுமத்திய தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்த முயற்சிப்பதாக அக்கட்சி கூறியிருக்கிறது.
மராட்டிய மேல்–சபையில் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கடந்த வாரம் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, சிவசேனாவை சேர்ந்த தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் விதிமுறைகளை மீறி, நாசிக்கில் மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தால் (எம்.ஐ.டி.சி) கையகப்படுத்த 400 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.ஏற்கனவே, விதிமுறை மீறல் பிரச்சினையில் வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில், மந்திரி சுபாஷ் தேசாய் மீதும் நில முறைகேடு குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எனினும், இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சிவசேனா, இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–சுபாஷ் தேசாய்க்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்த எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிற்காது. ஏனென்றால், அதில் சிறிதளவு கூட உண்மை இல்லை. எம்.ஐ.டி.சி. நிலத்தை கையகப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், விவசாயிகளின் விருப்பத்துக்குக் இணங்க அந்த நிலம் திரும்ப விவசாயிகளிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது.
ஒருபுறம் மும்பை– நாக்பூர் விரைவுச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுடன், விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக குற்றம்சாட்டுகின்றன. மற்றொரு புறம், விவசாயிகளின் விருப்பத்துக்கு இணங்க நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தாலும், அதிலும் குற்றம் காண்கின்றன.இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.