சுவாபிமானி சேத்காரி சங்கதானா கட்சியில் இருந்து மந்திரி சதபாவு கோட் நீக்கம்
சுவாபிமானி சேத்காரி சங்கதானா கட்சியில் இருந்து மந்திரி சதபாவு கோட் அதிரடியாக நீக்கப்பட்டார்.
புனே,
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மந்திரிசபையில், விவசாயத்துறை மந்திரியாக பதவி வகிப்பவர், சதபாவு கோட். சுவாபிமானி சேத்காரி சங்கதானா கட்சியின் மூத்த தலைவரான இவர், சமீப நாட்களாக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால், அவர் மீது விசாரணை நடத்த தசரத் சாவந்த் தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழு முன்பு மந்திரி சதபாவு கோட் ஆஜராகி, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார்.
எனினும், அவரது விளக்கம் விசாரணை குழுவுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால், அவரை கட்சியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனை நேற்று புனேயில் நிருபர்களிடம் கூறிய தசரத் சாவந்த், மந்திரி பதவியில் இருந்தும் சதபாவு கோட் விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இருப்பினும், தான் மந்திரி பதவியில் நீடிப்பது பற்றி முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பதில் அளித்த சதபாவு கோட், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக கூறினார்.
அவர் பாரதீய ஜனதாவில் சேர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story