நாமக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 566 மனுக்கள் குவிந்தன


நாமக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 566 மனுக்கள் குவிந்தன
x
தினத்தந்தி 8 Aug 2017 4:12 AM IST (Updated: 8 Aug 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 566 மனுக்கள் குவிந்தன. இதில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு கேட்டும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் மொத்தம் 566 மனுக்கள் கொடுத்தனர்.

இதில் குமாரபாளையம் தாலுகா கல்லங்காட்டு வலசு பொன்னி நகரில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் மனைவி ஈஸ்வரிக்கு சொந்தமான குடிசை எதிர்பாராத வீதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்ததை தொடர்ந்து, நாமக்கல் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நிவாரண பொருட்களை அவருக்கு கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார். தொடர்ந்து தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், 39 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story