அரசின் பல திட்டங்களை கவர்னர் முடக்கி வைத்துள்ளார் அமைச்சர் கந்தசாமி பேட்டி
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கவிஞரேறு வாணிதாசனார் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி,
இதனை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் கந்தசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை துறைமுக திட்டத்தை பொருத்தவரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை. முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தலைமையிலான அரசு மக்களுக்கும், மீனவர்களுக்கும் எதிராக எதையும் செயல்படுத்தாது. மற்ற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான் இதனை எதிர்க்கிறார்கள். அவர்கள் பல ஏக்கர் நிலங்களை பிடித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதை அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அச்சத்தால் இதனை எதிர்க்கின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் தான் மாநில முன்னேற்றத்திற்கு வேலைவாய்ப்பிற்கு தடையாக உள்ளனர். யார் தடுத்தாலும் துறைமுக திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய மந்திரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். சில சதிகள் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை தடுத்து, வேலைவாய்ப்பு ஏற்படுவதை அவர்கள் தடுத்து வருகின்றனர்.
புதுவை துறைமுகத்தில் தூர்வாரும் பணிக்கு அரசு எந்த உத்தரவும் அளிக்கவில்லை. கவர்னர் நேரடியாக தலையிட்டு மத்திய அரசின் துறைமுக கழகம் மூலம் தூர்வாரும் பணிக்கு உத்தரவிட்டார். கவர்னர் உத்தரவின் பேரில் தான் தூர்வாரும் பணி நடந்தது. அப்படி இருக்கும் போது தூர்வாரும் பணியில் ஊழல், முறைகேடு நடந்து இருப்பதாக கவர்னர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்படி என்றால் அவர் அனுமதித்த பணியில் ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறாரா? மக்கள் மத்தியில் வேண்டும் என்றே திட்டமிட்டு காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கவர்னர் தொடர்ந்து இதுபோல் செயல்பட்டு வருகிறார். எத்தனை சதிதிட்டங்கள் தீட்டினாலும் துறைமுக திட்டத்தை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம்.
இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் வளர்ச்சி காண்பதோடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதை தடுப்பதை முறியடிப்போம். கவர்னர் மீது அபாண்டமாக குறைகூற எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது. என்னுடைய துறையின் கீழ் உள்ள பல திட்டங்களை கவர்னர் முடக்கி வைத்துள்ளார். இலவச அரிசி, முதியோர் பென்ஷன், விவசாய கடன் தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு முழுமையான கல்வி நிதி உதவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் என் துறையையே சார்ந்தது. இதற்கான கோப்புகளுக்கு அனுமதிதராமல் காலம் கடத்துகிறார். அதன் பேரில் தான் குற்றம் சாட்டுகிறேன்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கெல்லாம் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தருவதில்லை. கவர்னர் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுத்தரலாம். சதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி செய்த போது உணவு பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. உணவில்லாமல் ஏழைகள் இறக்க கூடாது என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம் என்று கூற வேண்டும். அப்படி பலர் தாமாக முன்வந்து ரேசன் கார்டுகளை ஒப்படைத்து வருகின்றனர். அவர்களுக்கு பச்சைநிற ரேஷன் கார்டு கொடுத்து கவுரவப்படுத்த உள்ளோம்.
அரசிடம் இருந்து மக்களுக்கு பயன்படும் பல கோப்புகள் போகும்போது அதில் கவர்னர் கையெழுத்திட மறுக்கிறார். தனக்குத் தான் அதிகாரம் உள்ளது என கூறுபவர் அரசை தவறாக சுட்டிக் காட்டுகிறார். அப்படி இருப்பவரிடம் எப்படி சுமுகமாக நடந்துகொள்ள முடியும். பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்டவர் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறார். மக்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயல்பட நாங்கள் தயார். அதற்கு அவர்களும் ஒத்துழைக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்னர் கிரண்பெடி செயல்படுகின்றார். அவரது நோக்கம் நிறைவேறாது. முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு இன்னும் 4 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.