நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
இதுதொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
விநாயகர் சிலைகள்தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். வழிபாட்டுக்கு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக, ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ எனப்படும் ரசாயன வண்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடுகின்றன. பக்தர்கள் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்தவித ரசாயன கலவை அற்றதுமான, கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.
நீரில் கரையும் தன்மை உடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது.
கரைக்கும் இடங்கள்நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு நீர் நிலைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த இடங்களின் விவரம் வருமாறு:–
நெல்லை மாநகர் பகுதியில் உள்ள சிலைகள் தாமிரபரணி ஆற்றில் குறிச்சி, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில், மணிமூர்த்தீசுவரம் ஆகிய இடங்களில் கரைக்கலாம். ஊத்துமலை, ஆலங்குளம், சுரண்டை, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிலைகள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கரைக்க வேண்டும்.
செங்கோட்டை பகுதியில் உள்ள சிலைகள் குண்டாறு, அச்சன்புதூர் பகுதி சிலைகள் அனுமான் ஆறு, வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதி சிலைகள் ராயகிரி பிள்ளையார் மந்தை ஆறு ஆகிய இடங்களில் கரைக்க வேண்டும்.
திசையன்விளை, நாங்குநேரி, திருக்குறுங்குடி, களக்காடு, மூன்றடைப்பு, பழவூர், ராதாபுரம், பணகுடி, விஜயநாராயணம், வள்ளியூர் பகுதி சிலைகளை உவரி கடற்கரையில் கரைக்க வேண்டும்.
சுய சான்றிதழ்இவ்வாறு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலை தயாரிக்கும் நபர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தாங்கள் தயாரித்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டது என்று சுய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படியும், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.