நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மருந்து விற்பனை பிரதிநிதி சாவு
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக இறந்தார். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆண் பிணம்நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை ஆண் பிணம் ஒன்று மிதந்தது. ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தாமிரபரணி ஆற்றுக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆற்றில் மிதந்து வந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பிணமாக கிடந்தவர் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிணத்தை மீட்ட போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மருந்து விற்பனை பிரதிநிதிவிசாரணையில், இறந்தவர் நெல்லை கொக்கிரகுளம் இளங்கோ தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் ஆறுமுகம் (வயது 28) என்பது தெரியவந்தது. இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 1 மாதத்துக்கு முன்பு இவருடைய தாயார் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். தாயின் இறப்பு இவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே அவர், ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.