குடிநீர் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து  கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 Aug 2017 2:30 AM IST (Updated: 8 Aug 2017 8:14 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பாவூர்சத்திரம்,

குடிநீர் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

குடிநீர் இணைப்பு

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் சிலர் போலியாக ரசீது தயார் செய்து முறைகேடாக 200–க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் உரிய அனுமதியின்றி கூடுதலாக குடிநீர் இணைப்பு வழங்கியதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

முறைகேடாக இணைப்பு வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் முறையான அனுமதியின்றி வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

முற்றுகை

இந்த நிலையில் திருப்பணம்பட்டியில் புதிதாக குடிநீர் இணைப்பு பெற்ற 100–க்கும் மேற்பட்டவர்கள் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தாங்கள் பணம் செலுத்தி தான் குடிநீர் இணைப்பு பெற்றதாகவும், எனவே குடிநீர் இணைப்பை துண்டிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய யூனியன் ஆணையாளர் ஜனார்த்தனன் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படுவதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story