போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் முதியவர் உள்பட 4 பேருக்கு 7 ஆண்டு சிறை
போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் முதியவர் உள்பட 4 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிவகங்கை,
திருப்பத்தூர் போலீஸ் சரகத்தில் கடந்த 2013–ம் தனிப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றியவர் துக்காராம். இவர் கடந்த 30.9.2013 அன்று திருப்பத்தூர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நகரில் இருந்த டாஸ்மாக் கடை முன்பு சிலர் நின்று கொண்டிருந்தனர். துக்காராம் அவர்களிடம் யார் என்றும், எதற்காக நிற்கிறார்கள் என்றும் விசாரித்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் துக்காராமை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருப்பத்தூரை சேர்ந்த வேங்கை என்ற காளிதாஸ்(வயது 58), செல்லபாண்டி(45), சந்திரன்(66), பழனிகுமார்(54) மற்றும் 4 பேர் சேர்ந்து துக்காராமை தாக்கியது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், இதுதொடர்பாக சிவகங்கை தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி ராதிகா முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீஸ்காரர் துக்காராமை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வேங்கை என்ற காளிதாஸ், செல்லபாண்டி, சந்திரன், பழனிகுமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், வேங்கை என்ற காளிதாசுக்கு ரூ.1,500–ம், மற்றவர்களுக்கு ரூ.1,250–ம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.