ரெயிலே வராத ரெயில் நிலையத்தில் செயல்பட்ட டிக்கெட் முன்பதிவு மையம் மூடல், பொதுமக்கள் விரக்தி
ரெயிலே வராத நிலையிலும் தேனி ரெயில் நிலையத்தில் செயல்பட்ட டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டது. இதனால், பொதுமக்கள் விரக்தி அடைந்து உள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரைக்கு ரெயில் போக்குவரத்து இருந்தது. இந்த ரெயில் பாதையை அகல ரெயில்பாதையை மாற்றும் திட்டத்திற்காக ரெயில் போக்குவரத்து கடந்த 2010–ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. திட்டமிட்ட காலத்திற்குள் ரெயில் பாதை அமைக்கும் முடியும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களுக்கு 6½ ஆண்டுகளாக ஏமாற்றம் தான் கிடைத்து உள்ளது.
ரெயில் பாதை அமைக்கும் பணிகள் படுமந்தமாக நடந்து வருகிறது. திட்டத்திற்கு ஒரே தவணையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஓயாமல் மக்கள் போராடி வருகின்றனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும் ரெயில்பாதை அமைக்கும் பணியில் துரிதம் ஏற்படவில்லை.
இருந்த போதிலும், ரெயில் போக்குவரத்து இருந்தது என்பதற்கு அடையாளமாக தேனி, போடியில் ரெயில் நிலைய கட்டிடங்கள் உள்ளன. தேனி ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. காலை முதல் இரவு வரை செயல்பட்டு வந்த முன்பதிவு மையம், ரெயில் நிறுத்தப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு காலை முதல் மாலை வரை மட்டும் என மாற்றப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் மட்டும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த டிக்கெட் முன்பதிவு மையமும் மூடப்பட்டு விட்டது. இங்கு டிக்கெட் முன்பதிவு செய்தாலும், மதுரை அல்லது திண்டுக்கல்லுக்கு சென்று தான் ரெயில் ஏற முடியும் என்ற போதிலும், டிக்கெட் முன்பதிவு மையம் இருந்ததே என்ற ஆறுதலாவது மக்களிடம் இருந்தது.
டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டது குறித்து அங்கு அறிவிப்பு பதாகை தொங்க விடப்பட்டு உள்ளது. இங்கு டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால், இனிமேல், தேனி தபால் நிலையத்தில் செயல்படும் டிக்கெட் முன்பதிவு மையத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு நோட்டீசு ஒட்டப்பட்டு உள்ளது.
ரெயில் நிலையத்தில் இருந்த டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பொதுமக்கள் விரக்தி அடைந்து உள்ளனர். தினமும் அங்கு ரெயில்வே ஊழியர்கள் வந்து போனதால், கட்டிடம் பாதுகாப்பாக இருந்தது. இனிமேல், ஊழியர்கள் செல்லாத கட்டிடத்தை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, டிக்கெட் முன்பதிவு மையத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.