முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிப்பு


முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தேனி,

முன்னாள் படைவீரர் நலத்துறையால் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ்–2 தேர்வில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகள் மேல்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

60 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறைவாக எடுக்கும் மாணவ, மாணவிகள் தொகுப்பு நிதியில் இருந்து முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.

மேல்படிப்புகளுக்காக வழங்கப்படும் இந்த உதவித்தொகைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கலை மற்றும் அறிவியல் பிரிவில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு ரூ.2,500–ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், தொழில் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகளுக்கு ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், பட்டயப்படிப்புகள் அனைத்துக்கும் ரூ.11 ஆயிரத்து 500–ல் இருந்து 20 ஆயிரமாகவும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ரூ.2,500–ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தங்களின் வாரிசுகளுக்கு இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story