ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி கிராம மக்கள் மனிதசங்கிலி போராட்டம் சாலையோரத்தில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு


ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி கிராம மக்கள் மனிதசங்கிலி போராட்டம் சாலையோரத்தில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Aug 2017 4:30 AM IST (Updated: 9 Aug 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை ஊராட்சிக்கு வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். சாலையோரத்தில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சி பகுதியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தோட்டம் இருந்தது. இந்த தோட்டத்து நிலத்தில் புதிதாக கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியில் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் நீர் வற்ற தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கிணறு வெட்டும் பணிகளை நிறுத்த வலியுறுத்தியும், அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை ஊராட்சி மக்களுக்கு வழங்கக்கோரியும் கடந்த பல நாட்களாக கிராம மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிணறு வெட்டும் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தோட்டத்து கிணற்றில் இருந்து 3 மாதங்களுக்கு தண்ணீரை ஊராட்சி மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் கிணறு இருந்த தோட்டம் அதே ஊரை சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு கடந்த 12–ந் தேதி விற்பனை செய்யப்பட்டது கிராம மக்களுக்கு தெரியவந்தது.

தோட்டம் மற்றும் கிணற்றை விற்பனை செய்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றை கவர்னர் பெயருக்கு வழங்குவதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் மற்றும் நிலத்தை வாங்கிய சுப்புராஜ் தரப்பினரும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அந்த கிணற்றை ஊராட்சிக்கு வழங்க வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை கண்டித்தும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு கிராம பெண்கள் குத்துவிளக்கு ஏந்தி தெருக்களில் ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நேற்று நண்பகல் லட்சுமிபுரத்தில் தேனிக்கு செல்லும் சாலை ஓரத்தில் கருப்புக்கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் நேற்று மாலை 5½ மணி அளவில், கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனிதசங்கிலி அமைத்து போராட்டம் நடத்தினார்கள். கிணற்றை ஊராட்சிக்கு பெறும் வரை அகிம்சை வழியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கிராம பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்..


Next Story