வாகன உரிமம் இல்லை என்று கூறி மோட்டார் சைக்கிள் பறிமுதல் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க விவசாயி வலியுறுத்தல்


வாகன உரிமம் இல்லை என்று கூறி மோட்டார் சைக்கிள் பறிமுதல் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க விவசாயி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Aug 2017 3:45 AM IST (Updated: 9 Aug 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

எரியோடு அருகே வாகன உரிமம் இல்லை என்று கூறி மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி வலியுறுத்தியுள்ளார்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 30). விவசாயி. அவருடைய மகள் சம்வர்த்தினி (7). மகன் ஹயகிரீவ் (5). நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரையும், எரியோட்டில் இருந்து கரிசல்பட்டி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் தீபக்குமார் அழைத்து சென்றார். வடமதுரை–வேடசந்தூர் சாலையில் எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட எரியோடு போலீசார், தீபக்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். பின்னர், மோட்டார் சைக்கிளுக்கு வாகன உரிமம், பதிவுச்சான்று, வாகன காப்புறுதி சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் கொடுத்தனர்.

அதில், குறிப்பிட்ட நாளுக்குள் சான்றுகளை கொண்டு வரத்தவறினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து எரியோடு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். இதனால் தனது குழந்தைகளுடன் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இருளில் நடந்தே தனது ஊரான கரிசல்பட்டிக்கு தீபக்குமார் வந்து சேர்ந்தார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் தீபக்குமார் வாட்ஸ்–அப் மூலம் புகார் அனுப்பி உள்ளார். அதில் ஆட்டோ, கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டுமே வாகன உரிமம் உண்டு. மோட்டார் சைக்கிளுக்கு கிடையாது. ஆனால் வாகன உரிமம் இல்லை என்று கூறி என்னுடைய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். எனவே எரியோடு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகன சோதனையின்போது, சரக்கு வாகனம் ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்று எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதேபோல் வாகன உரிமம் இல்லை என்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story