திண்டுக்கல்லில் கிறிஸ்தவ ஆலய திருவிழா: 500 ஆடுகள், 1,700 கோழிகள் காணிக்கை செலுத்திய மக்கள்


திண்டுக்கல்லில் கிறிஸ்தவ ஆலய திருவிழா: 500 ஆடுகள், 1,700 கோழிகள் காணிக்கை செலுத்திய மக்கள்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:00 PM GMT (Updated: 2017-08-09T01:15:52+05:30)

திண்டுக்கல்லில் நடந்த கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் 500 ஆடுகள், 1,700 கோழிகளை மக்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும் விடிய, விடிய அசைவ விருந்து நடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள முத்தழகுப்பட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 30–ந்தேதி நவநாள் திருப்பலியுடன் தொடங்கியது. இதில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு திருப்பலி நடந்தது. இதையடுத்து கடந்த 6–ந்தேதி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் 7–ந்தேதி இரவு வாணவேடிக்கை முழங்க புனிதர்களின் மின்தேர் பவனி நடந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு முன்னாள் குருகுல முதல்வர் அருமைசாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் முத்தழகுப்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து புனித செபஸ்தியாருக்கு காணிக்கை செலுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஏராளமான மக்கள் காணிக்கை செலுத்தினர். 500 ஆடுகள், 1,700 கோழிகள் மற்றும் அரிசி முதலானவற்றை மக்கள் காணிக்கையாக வழங்கினர். இதில் ஆடுகள் மற்றும் கோழிகளை அறுத்து அசைவ உணவு சமைக்கப்பட்டது. இந்த சமையல் பணியில் 200–க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் இரவு 7 மணிக்கு அன்னதானம் தொடங்கியது. விடிய, விடிய நடந்த அன்னதானத்தில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அசைவ விருந்து சாப்பிட்டனர்.


Next Story