திரிசூலத்தில் ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் சாவு ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து பலி


திரிசூலத்தில் ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் சாவு ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து பலி
x
தினத்தந்தி 9 Aug 2017 5:45 AM IST (Updated: 9 Aug 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

திரிசூலம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த கல்லூரி மாணவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

தாம்பரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது20). இவர் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3–ம் ஆண்டு படித்து வந்தார். வந்தவாசியில் இருந்து தினமும் வரமுடியாத காரணத்தால் சிங்கபெருமாள் கோவிலில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தார்.

மாணவர் சந்தோஷ் நேற்று கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது வந்த மின்சார ரெயிலில் அவர் ஏறினார். அந்த ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் மாணவர் சந்தோஷ் ரெயிலில் இருந்து இறங்கி கீழே நின்றார்.

தவறி விழுந்து சாவு

பயணிகள் ஏறியதும் சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டது. அப்போது ரெயிலின் வாசலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில் புறப்பட்டதும் கீழே இறங்கி நின்ற மாணவர் சந்தோஷ் ஓடிச்சென்று ரெயிலில் ஏற முயன்றார்.

அப்போது கால் தடுமாறி மாணவர் சந்தோஷ் ரெயில் நிலைய நடைமேடைக்கும் ரெயிலுக்கும் நடுவே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் கிடைத்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனம் மோதி ஒருவர் சாவு

* பெருங்களத்தூரில் கூலி வேலை செய்து வந்த ஞானஆதிக்கம்(70) ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார்.

* புழல் பகுதியை சேர்ந்த தொழிலாளியான ஜேம்ஸ்(50) ஜி.என்.டி. சாலையில் சைக்கிளில் சென்றபோது மணல் லாரி மோதியதில் இறந்தார்.

* விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான மசூத்கான்(20) நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை தாக்கி 2 செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.

* பாரிமுனையில் வியாபாரிகளுக்கு இடையூறாக உள்ள குடிசை வீடுகளை அகற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தக அணியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

* அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சண்முகம்(33) என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியதாக மாதவரம் பகுதியை சேர்ந்த முருகேசன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

* ஆவடி பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவியான நித்யா நேற்று காலை 10 மணி அளவில் வீட்டின் 2–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

* அம்பத்தூர் காந்திநகரில் தனியாக வசித்து வந்த பாபு (51) வீட்டு கட்டிலில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

* ஓட்டேரி புளியந்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக சகோதரர்களான யூசுப்(48), காதர்(35) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது.

* கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்ட ‌ஷரீப்பாஷா(32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* சென்னை கண்ணகி நகரை சேர்ந்த அலமேலு(38) என்பவர் மண்எண்ணெய் அடுப்பை பற்றவைத்தபோது அதுவெடித்ததில் அவர் தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

* நீலாங்கரை பகுதியை சேர்ந்த சுந்தரேசன்(40) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ள சென்ற மர்ம மனிதர்கள் அங்கு இருந்த 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிநகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை திருடி சென்றனர்.

* கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக புரட்சிகர இளைஞர் கழக ஒருங்கிணைப்பாளர் பாரதி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

* சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான மூர்த்தி(53) என்பவரது வீட்டில் மர்ம மனிதர்கள் புகுந்து 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர்.


Next Story