சென்டாக் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது: அரசு பொறியியல் கல்லூரிகளில் பெரும்பான்மையான இடங்கள் நிரம்பின


சென்டாக் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது: அரசு பொறியியல் கல்லூரிகளில் பெரும்பான்மையான இடங்கள் நிரம்பின
x
தினத்தந்தி 8 Aug 2017 10:00 PM GMT (Updated: 8 Aug 2017 8:38 PM GMT)

புதுவையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான சென்டாக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் அரசு பொறியியல் கல்லூரிகளில் பெரும்பான்மையான இடங்கள் நிரம்பின.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. புதுவையில் 2 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளும், 16 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் உள்ளன. அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 561 இடங்கள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்கள் என 4 ஆயிரத்து 191 இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இதற்கான சென்டாக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவ - மாணவிகள் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியையே தேர்வு செய்தனர். கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு வழங்கினார்.

இந்த கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக நடக்கிறது. இன்றைய கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு 888 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.

புதுவையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 4 ஆயிரத்து 359 பேர் விண்ணப்பித்துள்ளனர். என்ஜினீயரிங் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 191 இடங்கள் இருப்பதால் விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

முதல் நாள் முடிவில் காலியாக உள்ள இடங்களின் விவரம் வருமாறு:-

புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பாடப்பிரிவில் 10 இடங்களும், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பாடப்பிரிவில் 16 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 12 இடங்களும், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) பாடப்பிரிவில் 21 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்டுமெண்டேசன் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 27 இடங்களும், கெமிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 35 இடங்களும் காலியாக உள்ளன.

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 49 இடங்களும், தகவல் தொழில்நுட்பம்(ஐ.டி.) பாடப்பிரிவில் 49 இடங்களும், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பாடப்பிரிவில் 18 இடங்களும், சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 38 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பாடப்பிரிவில் 47 இடங்களும் காலியாக உள்ளன. இதே போல் புதுவையில் உள்ள 16 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன. 

Next Story