கோவில்–பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்றவேண்டும்


கோவில்–பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்றவேண்டும்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-09T02:08:06+05:30)

கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் நகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நெல்லித்தோப்பில் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் மகேஷ், வசந்தகுமார், மாவட்ட செயலாளர்கள் ஆனந்தபாலாஜி, ஜீவன்பாபு, சுப்ரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

*புதிய பஸ் நிலையத்தை கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்ததற்கு நன்றி தெரிவிப்பது. மேலும் உலகத்தரம் வாய்ந்த நவீன தரத்துடன் பஸ் நிலையத்தையும், கழிப்பிட வசதிகளையும் மாற்றிட வேண்டும்.

*நகர மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்தி கொசுத்தொல்லையிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.

*ரோடியர், பாரதி, சுதேசி மில்கள் உடனடியாக திறக்கப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தீர்மானம் நிறைவேற்றினார். பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி பஞ்சாலைகளை நவீனமயமாக்கி திறக்கவேண்டும்.

*வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து மக்களுக்கும் கூடுதலாக ரே‌ஷன்பொருட்களை போர்க்கால அடிப்படையில் வழங்கவேண்டும்.

*கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

*மின்சார வரி, குடிநீர் வரி மற்றும் வீட்டுவரிக்களை மிக கடுமையாக புதுவை அரசு உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மீண்டும் முன்பு வசூலித்ததுபோல் இவ்வரிகளை மாற்றியமைக்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story