ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்
ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது பயன்பாடில்லாத சமுதாயக்கூடத்தின் பூட்டை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சி 25–வது வார்டிற்குட்பட்ட வி.மருதூர் பாரதிதாசன் தெருவில் ரேஷன் கடை, கடந்த 13 ஆண்டுகளாக ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த கடையில், பாதுகாப்பான முறையில் ரேஷன் பொருட்களை இருப்பு வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. மேலும் இந்த இடத்தை காலி செய்ய சொல்லி இடத்தின் உரிமையாளர் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். இத்தகைய இடநெருக்கடியான சூழ்நிலையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.
எனவே இந்த ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் அதுவரை, அதே பகுதியில் 4 ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கும் சமுதாய நலக்கூட புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை தற்காலிகமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையினால் இந்த ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த சர்க்கரை மூட்டைகள் மழைநீரில் நனைந்தது. இதனால் நேற்று காலை சர்க்கரை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 11 மணி ஆகியும் சர்க்கரை வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த ரேஷன் கடையை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் சமுதாய நலக்கூடத்தை திறந்து அதில் தற்காலிகமாக ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு சென்றனர். அதில் சிலர் ஆவேசமடைந்து, அந்த சமுதாய நலக்கூடத்தின் கதவு பூட்டை உடைத்து அந்த கட்டிடத்தை திறந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக மாற்று இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு சர்க்கரை வழங்கப்பட்டது.