முஸ்லிம் மாணவிகளை பர்தா அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியரை பணிநீக்கம் செய்ய கோரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
முஸ்லிம் மாணவிகளை பர்தா அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியரை பணிநீக்கம் செய்யக்கோரி அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,390 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 41 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மாணவிகள், பர்தா அணிந்தபடி பள்ளிக்கு சென்று வருகின்றனர். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவிகளுக்கு கீரப்பாளையத்தை சேர்ந்த விமல்ராம் என்ற ஆசிரியர் வேதியியல் பாடம் நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஆசிரியர் விமல்ராம், அந்த மாணவிகளிடம் பர்தா அணியக்கூடாது எனவும், பர்தாவை கழற்றி வைத்தால் ஒவ்வொரு மாணவிகளும் சினிமா நடிகைகள் போல் அழகாக இருப்பதாக கூறி வர்ணித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர் விமல்ராம் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. இதனால் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மாணவிகள் ஒன்று திரண்டு, தலைமை ஆசிரியரின் அறைக்கு சென்றனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் கண்ணதாசனிடம், ஆசிரியர் விமல்ராம் எங்களை பர்தாவை கழற்றி வைக்கும்படியும், அவ்வாறு பர்தாவை கழற்றினால் சினிமா நடிகைகள் போன்று இருப்பதாகவும் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
அதற்கு தலைமை ஆசிரியர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் தலைமை ஆசிரியரின் பேச்சில், மாணவிகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே மாணவிகள் தங்களது, பெற்றோரிடம் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றார்கள் ஒன்று திரண்டு நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைமை ஆசிரியர் கண்ணதாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெற்றோர்கள், மாணவிகளை வர்ணித்த ஆசிரியர் விமல்ராமை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், இது பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்பதால் ஆசிரியர்களுக்கு பதிலாக ஆசிரியைகளை நியமிக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு தலைமை ஆசிரியர் கண்ணதாசன், இது தொடர்பாக விசாரித்து கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர் விமல்ராமை பணி நீக்கம் செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி, போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் மதியம் 12 மணி அளவில் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பெற்றோர்கள், நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.