பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும்


பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும்
x
தினத்தந்தி 9 Aug 2017 12:45 AM GMT (Updated: 8 Aug 2017 9:00 PM GMT)

பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று சிதம்பரத்தில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.

புவனகிரி,

பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமத்தில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது:–

கடவாச்சேரி முதல் தில்லைநாயகபுரம் மற்றும் புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைவது குறித்து கருத்து கேட்டு வருகிறேன். கடலூர், நாகை மாவட்டத்தில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் அளவில் விளைநிலங்களை கையகப்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சுமார் ரூ.92 ஆயிரம் கோடி முதலீடு செய்யவும், அதில் முதற்கட்டமாக ரூ.1,146 கோடி ஒதுக்கீடு செய்து ரெயில் தண்டவாளங்கள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.

வாழ்வாதாரத்தை பாதுகாக்க சாதி, மதம் பார்க்காமல் நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இந்த திட்டம் செயல்பட்டால் நெய்வேலி போன்று இந்த பகுதி மாறிவிடும். இப்பகுதியில் 1,000 குடும்பத்தினர் காலி செய்யப்படுவார்கள். பெட்ரோலிய ரசாயன பூங்கா அமைக்கபட்டால் விளைநிலங்கள் மட்டுமின்றி குடிநீரும் பாதிக்கப்படும்.

இந்த பகுதியில் பூமிக்கு அடியில் ஏராளமான தாது பொருட்கள் உள்ளன. இதை எடுக்க மத்திய, மாநில அரசுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டியுள்ளது. வேளாண் மண்டலமாக நமது டெல்டா பூமியை வேதி மண்டலமாக உருவாக்கப்படப்போகிறது. பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைந்தால் இயற்கை சூழ்நிலையில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மைய சதுப்புநிலக் காடுகள் முற்றிலும் அழிந்து போகும். இந்த திட்டத்தை நாம் செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. நாம் ஒன்றுபட்டு, போராடி, இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து தொல்.திருமாவளவன் தில்லைநாயகபுரம், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பன், மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு, நிர்வாகிகள் ராஜேஷ், சரித்திரன், ஸ்ரீதர், குறிஞ்சிவளவன், நீதிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் அரங்க தமிழ்ஒளி நன்றி கூறினார்.


Next Story