மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:15 PM GMT (Updated: 8 Aug 2017 9:23 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மேகளத்தூர் கிராமத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நியாய விலைக்கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கூட்டுறவு வங்கி, பள்ளிக்கூடம், கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றின் அருகே இந்த மதுக்கடை அமைந்திருப்பதால், இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். அதன்படி நேற்று மேகளத்தூரில் மதுக்கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடையை மூட வேண்டும் என கிராம மக்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். போராட்டத்துக்கு லூர்துசாமி, மோகன், மணி, காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கனகதாசன், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, சப்–இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீபிரியா, சார்லஸ்தேவி, பார்த்தசாரதி மற்றும் போலீசார் மதுக்கடை முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அமைதி பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் தாசில்தார் ரமேஷ், சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மதுக்கடையை மூடுவது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என தாசில்தார் கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.


Next Story