மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தவர்களால் பரபரப்பு


மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Aug 2017 11:00 PM GMT (Updated: 8 Aug 2017 9:31 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

அரிமளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 7 பாடப் பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் மாணவர்கள் விரும்பிப்படித்த தொழிற்கல்வி பாடங்களான மூன்று பிரிவுகளை ஒரே கல்வியாண்டில் (2017-18) நீக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்கு ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.200 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், நன்கொடை என்ற பெயரிலும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை பயன்படுத்தி ரூ.250 முதல் ரூ.1,750 வரை மாணவர்களிடம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு உத்தரவை மீறி நடைபெறும் இத்தகைய வசூலை தடுத்து நிறுத்தக்கோரியும், நீக்கப்பட்ட தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நோக்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர்.

இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் விக்கி முன்னிலை வகித்தார். ஊர்வலமாக வந்தவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நுழைவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த வந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story