நெல்லையில் பீடி நிறுவனத்தை தொழிலாளர்கள் முற்றுகை சம்பளத்தை வாரந்தோறும் கையில் வழங்க வலியுறுத்தல்
சம்பளத்தை வாரந்தோறும் கையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லையில் பீடி நிறுவனத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
சம்பளத்தை வாரந்தோறும் கையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லையில் பீடி நிறுவனத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகைநெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பீடித்தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜாங்கம், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் ஆரியமுல்லை மற்றும் சேர்ந்தமரம் அருகில் உள்ள வேலப்பநாடானூர் கிளை தலைவர் முருகேசுவரி, செயலாளர் ராஜலெட்சுமி உள்ளிட்ட பீடி சுற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று நெல்லைக்கு வந்தனர். அவர்கள் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் பீடி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் பீடி நிறுவன நிர்வாகியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
இலை வெட்டும் பணிநாங்கள் வேலப்பநாடானூரில் உள்ள தங்களது பீடி உற்பத்தி நிறுவனத்தில் பீடி சுற்றி வருகிறோம். தற்போது 750 கிராம் இலையை பீடி சுற்றுவதற்கு ஏற்ற அளவில் வெட்டித்தருமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். இலையை மட்டும் வெட்டும் பணியில் ஈடுபடுவதால் வேலை அதிகரிப்பதுடன், வருமானமும் பாதிக்கிறது. எனவே தொழிலாளர்களிடம் இலை வெட்டக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் 750 கிராம் இலை வெட்டுவதற்கு கூலியாக ரூ.200 வழங்க வேண்டும்.
தங்களது நிதி நிறுவனத்திற்கு எங்களது சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். மேலும் தற்போது 1,000 பீடிக்கு வழங்கும் இலை 500 கிராம் தரமற்றதாக உள்ளதால் போதுமான பீடிகள் சுற்ற முடியவில்லை. எனவே தரமான இலை 700 கிராம் வழங்க வேண்டும்.
கையில் சம்பளம்எங்களது சம்பள பணத்தை வங்கி கணக்கில் போடுவதால் அலைச்சல் மற்றும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. வங்கிக்கு சென்று சம்பள பணத்தை எடுப்பதற்குள் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பள பணத்தை வாரந்தோறும் நேரடியாக கையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.