அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை நெல்லை மாவட்டத்தில் சுகாதார வாரம் கொண்டாட்டம் கலெக்டர் வேண்டுகோள்
நெல்லை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க வேண்டும், இதை வலியுறுத்தி சுகாதார வாரம் கொண்டாடப்படுகிறது
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க வேண்டும், இதை வலியுறுத்தி சுகாதார வாரம் கொண்டாடப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
போட்டிகள்நெல்லை மாவட்டத்தை வருகிற அக்டோபர் மாதத்துக்குள் திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி 9–ந் தேதி முதல் வருகிற 15–ந்தேதி வரை நெல்லை மாவட்டத்தில் சுகாதார வாரம் கொண்டாடப்பட உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து யூனியன்களிலும் வட்டார அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 10–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை ஒரு பிரிவாகவும், ஆக மொத்தம் 3 பிரிவுகளாக மாணவர்களுக்கு வட்டார அளவில், நெல்லை, தென்காசி மற்றும் சேரன்மாதேவி ஆகிய 3 கல்வி மாவட்டங்களின் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
என்ஜினீயரிங் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சுவர் சித்திரம் வரைதல், ‘‘மீம் கிரியேசன்ஸ்’’ மற்றும் ஒரு நிமிட சுகாதார விழிப்புணர்வு வீடியோ தயாரித்தல் போன்ற போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் ‘‘மீம் கிரியேசன்ஸ்’’ மற்றும் ஒரு நிமிட சுகாதார விழிப்புணர்வு வீடியோ தயாரித்தல் தொடர்பான விபரங்களை tirunelveli.zsbp@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள 9791647127 மற்றும் 7373096300 என்ற செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
மகளிருக்கு போட்டிஅனைத்து பஞ்சாயத்து யூனியன்களிலும் மகளிர் பங்கேற்கும் விழிப்புணர்வு கூட்டங்கள், ரங்கோலிப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் குழு பாடல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு யூனியன் பகுதியிலும் பள்ளிக்கூட மாணவ–மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் மனிதச்சங்கிலி ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இன்று முதல் வருகிற 15–ந்தேதி வரை ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை பயன்பாட்டை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
கழிப்பறைகள்எனவே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் சுகாதார வார கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வருகிற அக்டோபர் மாதத்துக்குள் தங்களது வீடுகளில் கழிவறை அமைத்து பயன்படுத்தி, திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். இதன் மூலம் நெல்லை மாவட்டதை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.