குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெருமாள்கோவில்பட்டியில் 50–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களுக்கு சோனைகவுண்டன்பட்டியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் வேடசந்தூர் பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றது.
இதன் காரணமாக ஆழ்துளை கிணறும் தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்களும் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வந்தனர். மேலும் ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தினால் தங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சீதாராமனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மனுவை பெற்ற சீதாராமன், கிணற்றை ஆழப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.