புழலில் லாரி மோதி ஓட்டல் தொழிலாளி பலி


புழலில் லாரி மோதி ஓட்டல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஓட்டல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்பசுவாமி நகரைச் சேர்ந்தவர் முகமது பூகாரி. இவருடைய மகன் முகமதுசபிக்(வயது 17). அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று மாலை தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புழல் கேம்ப் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புழல் காவாங்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, சோழவரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முகமதுசபிக், புழல் ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

அவருடைய நண்பர் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான புதுச்சேரியைச் சேர்ந்த ஜேசப்(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

செங்குன்றத்தை அடுத்த விஜயநல்லூர் கண்ணூர்அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. இவருடைய மனைவி அருள்மணி(30). இவருக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் நேற்று தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார்(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

புழல் காவாங்கரை ஜி.என்.டி. சாலையில் சென்ற போது செங்குன்றத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு புழல் ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அருள்மணி பரிதாபமாக இறந்தார். உதயகுமார் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மன்சூர்(40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story